மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டத்தில் (RCS – UDAN) வழங்கப்பட்டு வந்த மானிய காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, சேலம் விமான நிலையத்தின் விமான சேவைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய இயக்குநர் ஐ.நௌஷாத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சேலத்திலிருந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் அக்டோபர் மாதத்துடன் நிறுத்தப்படுகின்றன. அதேவேளையில், சென்னைக்கான விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இரட்டிப்பு ஆக்குகிறது. அலையன்ஸ் ஏர் (Alliance Air) நிறுவனம் வரும் 16ம் தேதி முதல் பெங்களூரு–சேலம் மற்றும் கொச்சி–சேலம் ஆகிய வழித்தடங்களில் தனது விமான சேவைகளை ரத்து செய்கிறது. மேலும், இண்டிகோ நிறுவனம் 24-ம் தேதியுடன் பெங்களூரு-சேலம், ஹைதராபாத்-சேலம் ஆகிய வழித்தடங்களிலான சேவைகளை நிறுத்துகிறது.அதேநேரத்தில், சென்னைக்கான பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, வரும் 25ம் முதல் இண்டிகோ நிறுவனம் சென்னை– சேலம் இடையே நாள்தோறும் இரண்டு நேரடி விமானங்களை இயக்குகிறது. புதிய கால அட்டவணையின்படி, கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள இண்டிகோ விமானம் நண்பகல் 12:10 மணிக்கு சேலம் வந்தடைந்து, 12:30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும். ஏற்கனவே இயங்கி வரும் இண்டிகோ விமான சேவை மாலை 4:50 மணிக்கு சேலம் வந்து, மாலை 5:10 மணிக்கு சென்னைக்கு திரும்பும்.
உடான் திட்டம்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் 2016-ல் தொடங்கப்பட்ட உடான் திட்டம், நாட்டின் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் சாமானிய மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆரம்பகட்டத்தில் குறைந்த பயணிகள் எண்ணிக்கையால் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கவும், சேவையை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து சாத்தியக்கூறு இடைவெளி நிதி (Viability Gap Funding - VGF) எனப்படும் மானிய உதவியை வழங்கின.
இந்த நிதியுதவியைப் பெறும் நிறுவனங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இருக்கைகளைக் குறைந்த கட்டணத்தில் பயணிகளுக்கு வழங்கின. பொதுவாக இந்த நிதி மானியம் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்கு 3 ஆண்டுகள் வரையிலான கால வரம்புக்கு மட்டுமே வழங்கப்படும். மானியக் காலம் முடிந்தவுடன், அந்த வழித்தடம் முழுமையான வர்த்தக ரீதியிலான செயல்பாட்டிற்கு மாறும்.
மானியம் இல்லாத சூழலில், போதுமான பயணிகள் ஆதரவு இல்லாத பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் போன்ற வழித்தடங்களில் விமானச் சேவைகளைத் தொடர்வது வர்த்தக ரீதியாகச் சாத்தியமில்லை என்பதால் நிறுவனங்கள் சேவைகளைத் திரும்பப் பெறுகின்றன. அதேவேளையில், அதிக பயணிகள் தேவை உள்ள சென்னை வழித்தடம் போதிய வருவாயைத் தருவதால், மானியமின்றி சுயசார்புடன் இயங்குவதோடு மேலதிக விமான சேவைகளையும் ஈர்க்கிறது.